திருவெண்காடு அருகே வெறி நாய்கள் கடித்து 25 ஆடுகள் சாவு 50 பேர் காயம்


திருவெண்காடு அருகே வெறி நாய்கள் கடித்து 25 ஆடுகள் சாவு 50 பேர் காயம்
x
தினத்தந்தி 3 March 2019 4:45 AM IST (Updated: 3 March 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு அருகே தென்னாம்பட்டினம் கிராமத்தில் வெறி நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் இறந்தன. 50 பேர் காயமடைந்தனர்.

திருவெண்காடு,

நாகை மாவட்டம், திருவெண்காடு அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பாடசாலைத்தெரு உள்ளது. இந்த தெருவில் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் வெறி நாய்கள் அதிகம் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்வோரை திடீரென பாய்ந்து கடிக்கிறது.

மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. வீடுகளில் யாரும் இல்லாத நேரங்களில் புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்துகின்றன. மேலும் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றையும் கடித்து காயப்படுத்தி விடுகிறது.

இந்தநிலையில் திருவெண் காடு அருகே உள்ள தென்னாம்பட்டினம் கிராமத்தில் வீட்டிற்கு வெளியே கட்டி இருந்த 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடந்த 4 நாட்களாக வெறி நாய்கள் கடித்து குதறியுள்ளன. இதில் படுகாயம் அடைந்த 25 ஆடுகள் இறந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இறந்த ஆடுகளை ஒரே இடத்தில் கொண்டு வந்து போட்டனர்.

இதைப்போல கீழ மூவர்க்கரை, மேலமூவர்க்கரை, தென்னாம்பட்டினம், மாத்தான்பட்டினம், கோணயாம்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை வெறிநாய்கள் கடித்துள்ளன. இதில் காயம் அடைந்த பொதுமக்கள் சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே நாகை மாவட்ட நிர்வாகம், திருவெண்காடு அருகே உள்ள தென்னாம்பட்டினம் கிராமத்தில் சுற்றித்திரியும் வெறி நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story