வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11,732 இளம் வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர்
திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் இளம் வாக்காளர்கள் 11 ஆயிரத்து 732 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 31–ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி 8 சட்டமன்ற தொகுதிகளில் 11 லட்சத்து 60 ஆண்கள், 11 லட்சத்து 8 ஆயிரத்து 617 பெண்கள், 244 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 22 லட்சத்து 8 ஆயிரத்து 921 வாக்காளர்கள் உள்ளனர். இந்தநிலையில் 2 ஆயிரத்து 482 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 23, 24–ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் இளம் வாக்காளர்கள் மாவட்டத்தில் அதிக அளவில் பெயர் சேர்த்துள்ளனர்.
8 சட்டமன்ற தொகுதிகளில் 18 வயது, 19 வயதுடையவர்கள் 6 ஆயிரத்து 975 பேரும், 20 வயது, 21 வயதுடையவர்கள் 4 ஆயிரத்து 757 பேரும், 22 வயதுக்கு மேற்பட்டவர்கள் 8 ஆயிரத்து 320 பேரும் என மொத்தம் 20 ஆயிரத்து 52 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருக்கிறார்கள். பெயரை நீக்கம் செய்ய 831 பேரும், திருத்தம் செய்ய 2 ஆயிரத்து 298 பேரும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 1,639 பேரும் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
குறிப்பாக இளம் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது ‘கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டபோது இந்த அளவுக்கு பெயர் சேர்க்கவில்லை. அதன்பிறகு சமூக ஊடகம் மூலமாக மாவட்ட மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விளம்பர பதாகைகள், விழிப்புணர்வு நோட்டீஸ்கள் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டன. வாட்ஸ்–அப் மூலமாக விழிப்புணர்வு வீடியோ காட்சிகள் அனுப்பி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்பயனாக 2 நாட்கள் நடந்த முகாமில் அதிக அளவில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருக்கிறார்கள். அதிலும் 21 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் 11 ஆயிரத்து 732 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருப்பது, தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு உருவாக்கியிருப்பதை காட்டுகிறது’ என்றனர்.