திருப்பூர் மாவட்டத்தில் தாசில்தார்கள், ஒன்றிய ஆணையாளர்கள் பணியிட மாற்றம்


திருப்பூர் மாவட்டத்தில் தாசில்தார்கள், ஒன்றிய ஆணையாளர்கள் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 3 March 2019 4:00 AM IST (Updated: 3 March 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் தாசில்தார்கள், ஒன்றிய ஆணையாளர்கள் என 40 பேர் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர்,

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழகம் முழுவதும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக உள்ள தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாவட்ட மாறுதல் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாவில் உள்ள தாசில்தார்களையும் கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுபோல் 31 ஒன்றிய ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இவர்களை மாற்றம் செய்யும்போது பணிகள் பாதிக்கப்படும் என்று கூறி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருசங்கங்களின் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தினர் கூறும்போது, ஊராட்சிகளுக்கு மக்கள் பிரதிநிதி இல்லை. இதனால் ஒன்றிய ஆணையாளர்கள் தான் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். ஒன்றிய ஆணையாளர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்திருக்கிறார்கள். கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படும். அப்போது ஊராட்சி பகுதிகளில் பிரச்சினை ஏற்பட்டால் புதிதாக வரும் ஒன்றிய ஆணையாளர்கள் அந்த பிரச்சினைகளை கையாளுவதில் சிரமம் ஏற்படும். எனவே இந்த மாவட்ட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளோம். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். என்றனர்.


Next Story