விழுப்புரம்- புதுச்சேரி இடையே பயணிகள் ரெயிலின் வேகம் அதிகரிக்கப்படும் கோட்ட மேலாளர் பேட்டி
விழுப்புரம்- புதுச்சேரி இடையே பயணிகள் ரெயிலின் வேகம் அதிகரிக்கப்படும் என்று கோட்ட மேலாளர் கூறினார்.
விழுப்புரம்,
திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி நேற்று காலை திருச்சி- சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் விழுப்புரம் வந்திறங்கினார். பின்னர் அவர், விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வந்து செல்லும் வழிகள் பாதுகாப்பற்ற முறையில் இருந்து வந்தது. பயணிகளின் பாதுகாப்பை கருதி இந்த வழிகளை சீரமைத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி சாலையை ஒட்டியவாறு உள்ள பாதை வழியாக இருசக்கர வாகனங்கள், கார்கள் ரெயில் நிலைய வளாகத்திற்குள் சென்று ரெயில் நிலைய நுழைவுவாயிலில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு வெளியே செல்லும் வகையில் ஒரு வழிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று (அதாவது நேற்று) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்திற்குள் விரைவில் பஸ்கள் வந்து செல்லும் வகையில் அனைத்து பணிகளும் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. ஆர்.எம்.எஸ். அலுவலகம் அருகில் கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது. அந்த பணி முடிந்ததும் ரெயில் நிலைய வளாகத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
மேலும் ஏற்கனவே பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த பயணச்சீட்டு வழங்கும் மையத்திலும் தற்போது பயணிகளின் வசதிக்காக கூடுதலாக பயணச்சீட்டு வழங்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திலும் மற்றும் புதிய கட்டிடத்தில் உள்ள பயணச்சீட்டு வழங்கும் மையத்திலும் பயணிகள் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்க சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விரைவில் ஏற்பாடு செய்யப்படும். தேஜஸ் அதிவிரைவு ரெயில் முதலில் திருச்சியில் மட்டுமே நிற்க முடிவு செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் செல்வதற்காக கொடைரோட்டில் இந்த ரெயில் நின்று செல்லும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. அதிவிரைவு ரெயில் என்பதால் விழுப்புரத்தில் நிற்க வாய்ப்பில்லை.
விழுப்புரம்- புதுச்சேரி இடையே தற்போது இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரெயில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. இதனை மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் இயக்குவதற்காக வளவனூர், வில்லியனூர் ரெயில் நிலையங்களில் அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் விரைவில் விழுப்புரம்- புதுச்சேரி பயணிகள் ரெயிலின் வேகம் அதிகரிக்கப்படும். மேலும் இதே வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் இயக்கப்படும் அதிகாலையில் செல்லக்கூடிய பயணிகள் ரெயிலின் நேரத்தை மாற்றுவது என்பது ஜூன் மாதத்திற்கு பிறகே முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ரெயில்வே அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story