மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு 1,745 பேர் எழுதினர்


மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு 1,745 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 3 March 2019 4:15 AM IST (Updated: 3 March 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 8 மையங்களில் நடந்த மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வை 1,745 பேர் எழுதினர்.

வேலூர், 

தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள 20 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இத்தேர்வுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 2 ஆயிரத்து 490 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு வேலூர் வெங்கடேஸ்வரா அரசு மேல்நிலைப்பள்ளி, தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி, அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி அரசு மேல்நிலைப்பள்ளி, சிநேகதீபம் மேல்நிலைப்பள்ளியில் 2 மையங்கள் என 8 மையங்களில் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

காலை 9 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே போன்று 10.30 மணி வரை வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது.

விண்ணப்பித்தவர்களில் 1,745 பேர் தேர்வு எழுதினர். 745 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் பறக்கும் படையினர் தேர்வு மையத்தில் ஆய்வு செய்து தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கிறதா? என்பது குறித்தும் கண்காணித்தனர்.

தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story