கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம் கலெக்டர் தகவல்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 March 2019 10:30 PM GMT (Updated: 2 March 2019 7:30 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.

தஞ்சாவூர்,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி வீசிய கஜா புயல் காரணமாக தஞ்சை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன. தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்களும், நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டன.

இது தவிர தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி பகுதிகளில் மின் விளக்குகளில் பொருத்தப்பட்டு இருந்த எல்.இ.டி. மின் விளக்குகள் கடுமையாக உடைந்து, நொறுங்கி சேதம் அடைந்தன. குறிப்பாக பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவோணம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் ஆகிய 6 ஒன்றியங்களில் மிக அதிக அளவிலும், மற்ற ஒன்றியங்களில் குறைந்த அளவிலும் என மொத்தம் 28 ஆயிரத்து 200 எல்.இ.டி. விளக்குகள் சேதம் அடைந்து பயன்பாடு இல்லாமல் போனது.

இதற்கு பதிலாக புதிதாக எல்.இ.டி. மின் விளக்குகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு தற்போது ஒவ்வொரு ஊராட்சியாக வழங்கப்பட்டு வருகிறது. சேதமடைந்த பகுதிகளில் முன்பு தற்காலிகமாக மற்ற விளக்குகள் பொருத்தப்பட்டன.

தற்போது எல்.இ.டி. விளக்குகள் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் மட்டும் 7 ஆயிரத்து 200 மின் விளக்குகளும், அதே போன்று தஞ்சை, பூதலூர், திருவையாறு, கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய 8 ஒன்றியங்களில் இதர மின் விளக்குகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 200 எல்.இ.டி, மின் விளக்குகள் வழங்கப்பட்டு கிராமப்பகுதிகளில் எலக்ட்ரீசியன்களை கொண்டு பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீதமுள்ள திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், ஒரத்தநாடு, ஆகிய 4 ஒன்றியங்களில் 14 ஆயிரம் மின் விளக்குகள் இன்னும் 2 தினங்களில் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராம பகுதிகளில் மின் விளக்குகள் அனைத்தும் சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Next Story