ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 2 நாட்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு


ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 2 நாட்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு
x
தினத்தந்தி 2 March 2019 11:00 PM GMT (Updated: 2 March 2019 7:45 PM GMT)

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றத்தை கண்டித்து திருச்சியில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாளை முதல் 2 நாட்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

திருச்சி,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் 32 வட்டார வளர்ச்சி அலுவலர்களை புதுக்கோட்டைக்கு பணியிட மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல தமிழகம் முழுவதும் ஒரு மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியிட மாற்ற உத்தரவை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மருதுபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பழனியாண்டி கோரிக்கைகள் குறித்து பேசினார். வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவிசங்கர், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து மாநில துணை தலைவர் பழனியாண்டி கூறுகையில், “வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு, ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணியை நடத்தி வந்த ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் பணியை நிறுத்திவிட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் கணக்கெடுப்பு பணி பாதிப்படைந்துள்ளது” என்றார். மேலும் நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை) கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறினார். இந்த போராட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தினரும் பங்கேற்கின்றனர். 

Next Story