சபாநாயகர் இருக்கை முன்பு எதிர்க்கட்சிகள் தர்ணா ரங்கசாமி ஆவேசம்
புதுவை சபாநாயகர் இருக்கை முன்பு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி ஆவேசமாக பேசினார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபை நேற்று கூட்டப்பட்ட நிலையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி எழுந்து ஆவேசமாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
கவர்னருக்கு எதிராக கருப்பு சட்டையுடன் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினீர்கள். எதற்கெடுத்தாலும் கவர்னரையே குறை கூறுகிறீர்கள். இப்போது மறுபடியும் போராட போகிறேன் என்கிறீர்கள்.
எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் செய்கிறீர்கள். உங்கள் போராட்டம் மூலம் மக்களுக்கு என்ன கிடைத்தது? ஆளுமை திறமை இல்லாவிட்டால் பதவியைவிட்டு விலகி செல்லுங்கள். கவர்னரிடம் என்ன பேசினீர்கள்? அதை சட்டசபையில் சொல்லுங்கள்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி பேசினார்.
இதேபோல் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவரும் அரசை விமர்சித்து பேசினார். ஆனால் அவற்றை கண்டுகொள்ளாமல் முதல்–அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியை தவிர என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபாநாயகரின் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரசுக்கு எதிராக பேசிக்கொண்டே இருந்தனர்.
ஆனாலும் சபை நடவடிக்கைகள் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு சட்டசபையில் இருந்து வெளியேறி சென்றனர்.
வெளிநடப்பு செய்தபின் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசானது 100–க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை சட்டமன்றத்திலும், தேர்தலின்போதும் வெளியிட்டது. ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட செயல்படுத்தவில்லை. மின்கட்டண உயர்வு, குடிநீர் வரி உயர்வு, குப்பை வரி, சொத்துவரி உயர்வு, காலிமனை வரி என மக்கள் உபயோகப்படுத்தும் அன்றாட நிகழ்வுகளில் சட்டமன்ற விவாதம் இன்றி வரி உயர்த்தப்பட்டு வருகிறது.
மத்திய பட்ஜெட்டில் நமது மாநிலத்துக்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் முழு பட்ஜெட்போட அரசு எந்தவித சிறு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கண்துடைப்பு நாடகமாக இடைக்கால பட்ஜெட்டை அரசு சமர்ப்பிப்பது அரசின் பலகீனத்தை காட்டுகிறது.
நிர்வாக சீர்கேட்டை மூடிமறைக்கும் விதத்தில் ஆட்சியாளர்கள் கவர்னர் மாளிகை எதிரில் தர்ணா போராட்டம் நடத்தி மக்களிடம் நாடகமாடினார்கள். தற்காலிக சமரசம் செய்துகொண்டு மறுபடியும் தர்ணா போராட்டம் நடத்துவோம் என்கிறார்கள். கவர்னர் மாளிகை முன்பு எதற்காக போராட்டம் என்பதை சட்டமன்றத்தில் கூறவேண்டிய முதல்–அமைச்சர் மவுனமாக உள்ளார். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று அறிவித்து 2 மாதமாகவும் அதற்கான அரசாணையை ஏன் போடவில்லை?
சட்டமன்ற விதிகளையும் அரசு காலில்போட்டு மிதிக்கிறது. அறிவித்தது எதையும் செயல்படுத்தாத அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.