அங்கன்வாடி மையங்களில் ஆதார் பதிவு முகாம் நடத்த திட்டம்


அங்கன்வாடி மையங்களில் ஆதார் பதிவு முகாம் நடத்த திட்டம்
x
தினத்தந்தி 3 March 2019 4:00 AM IST (Updated: 3 March 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

அங்கன்வாடி மையங்களில் ஆதார் பதிவு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை அனைவருக்கும் வங்கிக்கணக்கு திட்டம் பரீட்சார்த்தமாக அமல்படுத்தப்பட்டது. அத்துடன் ஆதார் இணைக்கப்பட்டு முதன் முதலில் கியாஸ் மானியத்தை வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டமும் இங்குதான் அமலானது.

புதுவை மாநிலத்தில் மாகி மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் முழுமையாக ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. புதுவை, காரைக்காலில் ஒருசிலர் ஆதார் பெறாமல் உள்ளனர்.

அனைவருக்கும் ஆதார் வழங்க அரசு சார்பில் பொதுசேவை மையங்களில் ஆதார் அட்டை பெற பதிவு செய்யும் வசதி உள்ளது. கிராமங்களில் இந்த பொதுசேவை மையங்கள் குறைவாகவே உள்ளதால் ஆதார் அட்டை பெற பதிவு செய்வதற்கான முகாம்களை அங்கன்வாடி மையங்களில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆதார் பதிவுக்காக புதுவை பிராந்தியத்தில் முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, அரியாங்குப்பம், வில்லியனூர் ஆகிய இடங்களில் திட்ட அலுவலகம் அமைக்கப்படுகிறது. ஒரு திட்ட அலுவலகத்துக்கு ஆதார் பதிவு கருவிகள் 3 வழங்கப்பட உள்ளது.

அதில் ஒரு கருவி மட்டும் திட்ட அலுவலகத்திலேயே வைக்கப்படும். மற்ற இரு கருவிகளும் சுழற்சி முறையில் கிராமப்பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு ஆதார் பதிவு நடைபெறும்.

அவ்வாறு ஆதார் பதிவு கருவிகள் வரும் தேதிகள் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அங்கன்வாடி மைய ஊழியர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். பிறந்த குழந்தைகளுக்கும் உடனடியாக ஆதார் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கு பிறப்பு சான்றிதழ் அவசியமாகும். பிறந்த குழந்தைகளுக்கான பதிவில் பெற்றோர்களின் முழு விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

5 வயதுக்கு மேல் அவர்கள் மீண்டும் விவரங்களை கொடுத்து புதிய ஆதார் பெற்றுக்கொள்ள வேண்டும். முதல் முறையாக ஆதார் பெறுபவர்களுக்கு பதிவு கட்டணம் முற்றிலும் இலவசமாகும்.

இந்த முகாம்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Next Story