கூட்டு பண்ணைய திட்டத்தில் வேளாண் கருவிகள் அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்


கூட்டு பண்ணைய திட்டத்தில் வேளாண் கருவிகள் அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
x
தினத்தந்தி 3 March 2019 3:30 AM IST (Updated: 3 March 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

கூட்டு பண்ணைய திட்டத்தில் விவசாய உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் கருவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

சிவகங்கை,

மாவட்ட வேளாண்மைத்துறை மூலம் கூட்டுபண்ணையத்திட்டத்தில் விவசாய உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கும் விழா சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு இளங்கோவன் வரவேற்று பேசினார்.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் பாஸ்கரன் 52 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பில் வேளாண் எந்திரங்களை வழங்கி பேசியதாவது:– மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் கூட்டுப்பண்ணைய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் 2018–19–ம் ஆண்டில் 260 உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டன, இவைகளை ஒருங்கிணைத்து 52 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்களுக்கு அரசு தொகுப்பு நிதி ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் 52 குழுக்களுக்கு ரூ.2 கோடியே 60 லட்சங்கள் வழங்கப்பட்டன

இந்த தொகையில் உழவர் உற்பத்தியளர் குழுக்களுக்கு தேவையான பண்ணை எந்திரங்கள் வழங்குவதற்கு வாங்குபவர், விற்பவர் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்த டிராக்டர், பவர்டில்லர் போன்ற 139 பண்ணை எந்திரங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் இவைகளை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வேளாண்மை தொழிலை திறம்பட செய்து பயன் அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சசிகலா, தோட்டக்கலைத்தறை துணை இயக்குனர் ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சர்மிளா, சிவகங்கை வேளாண்மை உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், வேளாண்மை அலுவலர் முருகபாரதி, அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார். முடிவில் வேளாண்மை அலுவலர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.


Next Story