ஆதரவற்றோர் இல்லங்களில் அடிப்படை வசதி, பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யவேண்டும் கலெக்டர் வீரராகவ ராவ் அறிவுறுத்தல்
ஆதரவற்றோர் இல்லங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யவேண்டும் என்று அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அறிவுறுத்தி உள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழு ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் சார்பு நீதிபதி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் பேசியதாவது:– ஆதரவற்ற முதியோர்கள், சிறு குழந்தைகள் ஆகியோர் நலனுக்காக சமூகநலத்துறை மற்றும் குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் அரசு சார்பாகவும், தன்னார்வ தொண்டு அமைப்புகளின் சார்பாகவும், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் நல காப்பகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய ஆதரவற்றோர் இல்லங்களில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முறையே பின்பற்றப்படுவது குறித்து ஆய்வு செய்து அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் 100 சதவீதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக ஆதரவற்றோர் இல்லங்களில் போதிய இருப்பிட வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள சிறு குழந்தைகள், வளர் இளம் பெண்கள் ஆகியோரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அவர்களது உடல் ஆரோக்கியத்தினை பாதுகாக்கும் வகையில் உயரத்திற்கு ஏற்ற எடை என்பதை அடிப்படையாக கொண்டு ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.
முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் புகார், ஆலோசனை பெட்டி அமைத்து அவற்றில் தெரிவிக்கப்படும் கோரிக்கை மற்றும் புகார்களை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். இத்தகைய கண்காணிப்பு பணிகளை சமூகநலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், குழந்தைகள் நல குழு சார்ந்த அலுவலர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். இதுதவிர குழந்தை திருமணங்களை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணபிரான், மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர் உட்பட அரசு அலுவலர்கள், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லங்களை சார்ந்த தன்னார்வ தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.