எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கை விவகாரம்: தனியார் பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி விசாரணை
எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் விசாரணை நடத்தினார்.
போத்தனூர்,
கோவை குனியமுத்தூர் பகுதியில் நிர்மல் மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்புக்கு மாணவர் சேர்க்கை தொடர்பாக ஒரு நோட்டீசு நேற்று முன்தினம் ஒட்டப்பட்டு இருந்ததாகவும் அதில் குறிப்பிட்ட மதத்தினரின் குழந்தைகளுக்கு மட்டுமே எல்.கே.ஜி. வகுப்புக்கான விண்ணப்பம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்ததாகவும் தகவல் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த நோட்டீசு ஒட்டப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து அந்த நோட்டீசு அகற்றப்பட்டது. அதற்கு பதில் பள்ளி நிர்வாகம் சார்பில் ஒட்டப்பட்ட முந்தைய சுற்றறிக்கையினை (நோட்டீசு) பொதுமக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், எல்.கே.ஜி. சேர்க்கைக்கான விண்ணப்பம் வருகிற 30-ந் தேதி முதல் வினியோகம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று காலை அந்த பள்ளிக்கு அய்யண்ணன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர் அதிகாரி அய்யண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்து பார்த்ததில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மாணவர்கள் 46 சதவீதம் முதல் 49 சதவீதம் வரை சேர்க்கப்பட்டு உள்ளனர். இதன்படி கடந்த காலங்களில் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சேர்க்கை நடந்து உள்ளது தெரியவந்தது. தற்போது மாணவர் சேர்க்கை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பில் மன்னிப்பு கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் எல்.கே.ஜி. சேர்க்கை தொடர்பாக நோட்டீசு ஒட்டப்பட்டு இருந்தது தவறான நடவடிக்கையாகும். இதுகுறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறும்போது, எங்கள் பள்ளியில் அனைத்து தரப்பு மாணவர்களும் படித்து வருகிறார்கள். தற்போது பள்ளியில் பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு பாதிக்காத வகையிலும், அதிகளவு கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும் மாணவர் சேர்க்கை குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டது. இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றனர்.
Related Tags :
Next Story