52 பேர் பணி நீக்கத்தை கண்டித்து குப்பை ஏற்றி வரும் வாகனங்களை சிறைபிடித்து தொழிலாளர்கள் தர்ணா


52 பேர் பணி நீக்கத்தை கண்டித்து குப்பை ஏற்றி வரும் வாகனங்களை சிறைபிடித்து தொழிலாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 3 March 2019 4:30 AM IST (Updated: 3 March 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

52 பேர் பணி நீக்கத்தை கண்டித்து குப்பை ஏற்றி வரும் வாகனங்களை சிறைபிடித்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு கோட்டத்திலும் நுண் உர செயலாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் நேற்று அரியமங்கலம் கோட்டத்தில் உள்ள துப்புரவு பணியாளர்கள் 52 பேரை அதிகாரிகள் பணி நீக்கம் செய்ததாக தெரிகிறது. இதனை கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரியும், துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு) சார்பில் அரியமங்கலம் குப்பை கிடங்குக்கு குப்பைகளை ஏற்றிவரும் வாகனங்களை சிறைபிடித்து அதன் நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். துணை தலைவர் கிச்சான், செயலாளர் மாறன் மற்றும் தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் கார்த்திகேயன், பரசுராமன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் அனைத்து தொழிலாளர் களுக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தினால் சுமார் 3 மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டது. 

Next Story