பா.ஜனதா சார்பில் சாதனை விளக்க மோட்டார் சைக்கிள் பேரணி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு


பா.ஜனதா சார்பில் சாதனை விளக்க மோட்டார் சைக்கிள் பேரணி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 March 2019 4:15 AM IST (Updated: 3 March 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

களியக்காவிளை,

குமரிமாவட்ட பா.ஜனதா இளைஞரணி சார்பில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பேரணி அருமனையில் இருந்து மேல்புறம், குழித்துறை வழியாக களியக்காவிளை சென்றடைந்தது. பேரணிக்கு மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் வின்சென்ட் தலைமை தாங்கினார், பேரணியில் ஏராளமான பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

பேரணியை முடித்து வைத்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:-

உலகஅளவில் பொருளாதார வளர்ச்சியில் நாம் முன்னணியில் நின்று கொண்டிருக்கிறோம். மத்தியில் ஆளுகின்ற பா.ஜனதா அரசு நிகழ்காலத்திற்கு மட்டுமல்லாமல், வருங்காலங்களின் தேவைகளையும் அறிந்து திட்டமிட்டு தொலைநோக்கு பார்வையுடன், வளர்ச்சி பணிகள் மேற்கொண்டு வருகிறது.

விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் பயன்படும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குமரிமாவட்டத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மட்டும் ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக வாழ ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2 கோடி பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

குமரிமாவட்டத்தில் நான்கு வழி சாலையை மேம்படுத்த ரூ.3 ஆயிரம் கோடியும், இரட்டை ரயில் பாதை விரிவாக்கத்திற்கு ரூ. 4 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்களின் நலன் அறிந்து வளர்ச்சிப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் உண்ணாமலைகடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன், கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ், சஜீ, விஜயபிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story