திண்டுக்கல் அருகே, ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்


திண்டுக்கல் அருகே, ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்
x
தினத்தந்தி 3 March 2019 4:00 AM IST (Updated: 3 March 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தின் அருகில் உள்ள மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க பல்வேறு பகுதிகளை சேர்ந்த 550 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 500 காளைகள் தேர்வு செய்யப்பட்டு களத்தில் இறக்கப்பட்டன. இதேபோல் காளைகளை அடக்குவதற்காக திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 450 பேர் பதிவு செய்திருந்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 400 பேர் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதையடுத்து ஜல்லிக்கட்டு தொடங்கியது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை மாநில தலைவர் கார்த்தி, கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலில் ஒய்.எம்.ஆர்.பட்டி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை யாரும் பிடிக்கவில்லை.

ஜல்லிக்கட்டு களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க காளையர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. சில காளைகளை அடக்குவது, காளையர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஜல்லிக்கட்டு களத்தில் திமிலை உயர்த்தியபடி நின்று வீரர்களை பல காளைகள் அச்சுறுத்தின. இருப்பினும் சில காளையர்கள் திமிலை விடாமல் பிடித்து காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளிக்காசுகள், பீரோ, கட்டில், சைக்கிள், எல்.இ.டி. டி.வி., சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், வீரர்கள் உள்பட 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு அங்கு அமைக் கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிலர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஜல்லிக்கட்டையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story