கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நகரின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அத்துடன் வத்தலக்குண்டு மெயின் சாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் நகரில் குளுமையான சூழல் காணப்பட்டது.
இதனிடையே நேற்று காலை முதலே ஏராளமான வாகனங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் பகுதியில் குவிந்தனர். இதனால் சுற்றுலா இடங்கள் களைகட்டியது. அத்துடன் பல்வேறு இடங்களில் மேகக்கூட்டங்கள் தரையிறங்கி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தது. இதனால் குளு குளு சீசன் தொடங்கியதாக கருதி அனைவரும் குதூகலித்தனர்.
இந்நிலையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி, குதிரை சவாரி உள்ளிட்ட பல்வேறு கேளிக்கைகளில் உற்சாகமாக ஈடுபட்டனர். அவர்கள் செட்டியார் பூங்கா மற்றும் பிரையண்ட் பூங்காவில் பொழுது போக்கினர். அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்ததன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காததன் காரணமாக தனியார் காட்டேஜ்களில் அதிக கட்டணம் கொடுத்து சுற்றுலா பயணிகள் தங்கினர்.
Related Tags :
Next Story