ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உக்கடம் பெரிய குளக்கரையில் நடைபாதையுடன் பூங்கா பணிகள் மும்முரம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உக்கடம் பெரிய குளக்கரையில் நடைபாதையுடன் பூங்கா அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கோவை,
கோவை உக்கடத்தில் உள்ள பெரிய குளம் 327 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த குளக்கரையின் மொத்த தூரம் 5.2 கிலோ மீட்டர் ஆகும். மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தின் கிழக்கு பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரம் கடந்த 4 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி இருந்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில், குளக்கரை பகுதி சீரமைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உக்கடம் பெரியகுளத்தின் மீதமுள்ள 4 கிலோ மீட்டர் தூரத்தை மேம்படுத்தி நடைபயிற்சி பாதை, சைக்கிள் இயக்கும் பாதை, பொழுதுபோக்கு பூங்கா, ஸ்மார்ட் இருக்கை, இலவச வைபை போன்ற நவீன வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக ரூ.39 கோடியே 74 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள அனைத்து குளங்களும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது முதல்கட்டமாக உக்கடம் பெரிய குளக்கரையை மேம்படுத்தி பொதுமக்கள் நடை பயிற்சி செல்லவும், சைக்கிள் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் உக்கடம் பஸ் நிலையம் எதிரே இருந்து கிழக்கு பகுதியில் 100 மீட்டர் தூரம் வரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன. தற்போது அங்கு புல் தரை அமைத்தல், ஸ்மார்ட் இருக்கை மற்றும் மேற்கூரை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதத்துக்குள் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story