கோவையில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை
கோவை ஒண்டிப்புதூரில் மூதாட்டியை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு அவர் அணிந்து இருந்த 4½ பவுன் தங்கச்சங்கிலியை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
சிங்காநல்லூர்,
இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கோவை ஒண்டிப்புதூர், சவுடம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராமசாமி என்பவருடைய மனைவி கரியம்மாள் (வயது 85). இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கரியம்மாளுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கரியம்மாள் இளைய மகனுடன் வசித்து வந்தார். அவர் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் கரியம்மாளின் வீட்டுக்கு சென்றனர். அப்போது மூதாட்டி கரியம்மாள் தலை, முகத்தில் ரத்தக்காயத்துடன் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அவருடைய மகன்களுக்கும், மகளுக்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள் தகவல் கொடுத்தனர். வேலைக்கு சென்று இருந்த அவர்கள் அலறியடித்துக்கொண்டு வந்து பார்த்தனர். தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், அவர் அணிந்து இருந்த 4½ பவுன் தங்கச்சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கொலைபற்றிய தகவல் அறிந்ததும், கோவை கிழக்குப்பகுதி குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கரியம்மாளின் தலையிலும், முகத்திலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. அவருடைய தலை மற்றும் முகத்தில் கத்தியால் குத்தி கொன்றுவிட்டு நகையை கொள்ளையடித்து சென்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலை நடைபெற்ற வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. போலீஸ் மோப்பநாய் கொண்டு செல்லப்பட்டது. அதுயாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
கரியம்மாளுக்கு தெரிந்த யாரோதான் அவரை கொன்று நகையை கொள்ளையடித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை உயிருடன் விட்டால் காட்டி கொடுத்துவிடுவார் என்று கருதி கொலை செய்துள்ளனர். எனவே அந்த வீட்டுக்கு யார்-யாரெல்லாம் வந்தார்கள்? என்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story