மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தி.மு.க.வினர் மறியல் 25 பெண்கள் உள்பட 90 பேர் கைது


மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தி.மு.க.வினர் மறியல் 25 பெண்கள் உள்பட 90 பேர் கைது
x
தினத்தந்தி 3 March 2019 3:15 AM IST (Updated: 3 March 2019 5:43 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி பொள்ளாச்சியில் மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட தி.மு.க. வினர் 90 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் குற்றவாளிகளை தப்பிக்க விட்ட போலீசாரை கண்டித்தும், வழக்கை சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்ற கோரியும், தி.மு.க.வினர் பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

அதன்படி நேற்று புதிய பஸ் நிலையம் முன் திரண்டனர். பின்னர் அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர். அப்போது போலீசார் அவர்களை கைது செய்வதற்கு வேனை கொண்டு வந்து நிறுத்தினார்கள். ஆனால் தி.மு.க.வினர் வேனில் ஏறாமல் சிக்னல் பகுதிக்கு வந்து நடுரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கபட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 90 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். இதையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயராமன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நடேசன், ஜெயக்குமார், தங்கபாண்டியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தி.மு.க.வினர் கூறியதாவது:-

உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்

தென்னை மற்றும் சந்தைக்கு பெயர் பெற்றது பொள்ளாச்சி. இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு உலக புகழ் பெற்றது பொள்ளாச்சி. அப்படி இருந்த பொள்ளாச்சி இந்த சம்பவத்தால் கேவலமாகி விட்டது. மாணவிகளை முகநூல் (பேஸ்புக்) மூலம் பழகி அழைத்து சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. இதுவரைக்கும் 250 வீடியோக்கள் வரை சிக்கியுள்ளன. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு வெளியிட்ட ஆடியோவில் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே திருநாவுக்கரசை பத்திரமாக உயிருடன் பிடித்து வந்து விசாரணை நடத்த வேண்டும். தற்போது பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள முக்கிய குற்றவாளி ஒருவர் ஆளும்கட்சி பிரமுகர் ஒருவருடன் சுற்றி திரிந்து வருகிறார். அந்த நபரையும் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்திற்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. எனவே போலீசார் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை பிடித்து கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story