வேட்டவலத்தில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பினர்


வேட்டவலத்தில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பினர்
x
தினத்தந்தி 3 March 2019 3:45 AM IST (Updated: 3 March 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

வேட்டவலத்தில் வங்கி ஏ.டி.எம்.எந்திரத்தை மர்மநபர்கள் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அலாரம் ஒலித்ததால் அவர்கள் தப்பிவிட்டனர்.

வேட்டவலம், 

வேட்டவலம் தேரடி வீதியில் பால் ஸ்டோர் பஸ் நிறுத்தம் அருகில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை 2 மணி அளவில் மர்மநபர்கள் சிலர் ஏ.டி.எம். மையத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் இடத்தில் உள்ள கதவை உடைத்து திறந்து உள்ளனர்.

அப்போது ஏ.டி.எம். மையத்தில் உள்ள அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மர்மநபர்கள், பொதுமக்களிடம் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் கொள்ளை போகாமல் தப்பியது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு தெரிவித்தார்.

தகவல் அறிந்த வேட்டவலம் போலீசார் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, கிருஷ்ணமூர்த்தி, ரவி தலைமையில் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

இந்த நிலையில் கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம்.மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டனர். அதன் அடிப்படையில் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story