பாலியல் உறவுக்கு அழைக்கும் அரசு ஊழியர்கள் மீது பெண்கள் புகார் அளிக்கலாம் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி தகவல்
பாலியல் உறவுக்கு அழைக்கும் அரசு ஊழியர்கள் மீது பெண்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி. பிபின் குமார் சிங் கூறியுள்ளார்.
மும்பை,
கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருபவர் ரமேஷ்சந்திர ராஜ்புத் (வயது48). இவர் சொத்து வரி கட்ட கூடுதல் அவகாசம் கேட்ட பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரமேஷ்சந்திர ராஜ்புத்தை கைது செய்தனர்.
இந்தநிலையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தங்களது கடமையை செய்ய அரசு ஊழியர்கள் யாராவது பெண்களை உறவுக்கு அழைத்தால் அதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கலாம்.
புகாரில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகார் அளிக்கும் பெண்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி. பிபின் குமார் சிங் கூறியதாவது:-
பெண்களை பாலியல் உறவுக்கு அழைத்தல் மற்றும் பணம், அன்பளிப்பு பெறுதல் எல்லாமே லஞ்சம் தான். மராட்டியத்தில் பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த அரசு ஊழியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை.
இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கும் பெண்கள் 1064 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு எங்களிடம் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story