வடலா-ஜேக்கப் சர்க்கிள் இடையே மோனோ ரெயில் சேவை : முதல்-மந்திரி இன்று தொடங்கி வைக்கிறார்


வடலா-ஜேக்கப் சர்க்கிள் இடையே மோனோ ரெயில் சேவை : முதல்-மந்திரி இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 3 March 2019 5:55 AM IST (Updated: 3 March 2019 5:55 AM IST)
t-max-icont-min-icon

வடலா - ஜேக்கப் சர்க்கிள் இடையே மோனோ ரெயில் சேவை இன்று தொடங்குகிறது. சேவையை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

மும்பை,

மும்பையில், நாட்டிலேயே முதல் முறையாக கடந்த 2014-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடி செலவில் செம்பூர் - வடலா இடையே மோனோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வழித்தடம் ஆர்.சி. மார்க், பெர்டலைசர் டவுன்சிப், பாரத் பெட்ரோலியம், மைசூர் காலனி, பக்தி பார்க் என கிழக்கு புறநகர் பகுதிகளுக்குள் இருந்ததால் 12 கி.மீ. தூரம் கொண்ட செம்பூர் - வடலா இடையேயான மோனோ ரெயில் திட்டத்துக்கு பொது மக்களிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

காலை, மாலை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் மோனோ ரெயில்கள் காலியாகவே ஓடின. எனினும் கிழக்கு புறநகரையும் தென்மும்பையையும் மத்திய மும்பை வழியாக இணைக்கும் வகையிலான வடலா - ஜேக்கப் சர்க்கிள் இடையேயான 2-ம் கட்ட மோனோ ரெயில் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் தான் நடந்து வந்தன. எனவே காலக்கெடு முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் 2-ம் கட்ட மோனோ ரெயில் திட்டப்பணிகள் முடியாமல் இருந்தது. பணிகளை விரைந்து முடிக்குமாறு பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் வடலா - ஜேக்கப் சர்க்கிள் இடையே மோனோ ரெயில் சேவையை தொடங்க மாநில அரசு தீவிரம் காட்டியது.

இந்தநிலையில், 2-ம் கட்ட பணிகள் முடிந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடலா - ஜேக்கப் சர்க்கிள் இடையே மோனோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட உள்ளது.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வடலா மோனோ ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு கொடி அசைத்து சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் மாநில மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

8 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள வடலா - ஜேக்கப் சர்க்கிள் வழித்தடம் தொழில் கூடங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள ஜி.டி.பி. நகர், அண்டாப்ஹில், வடலா ரோடு, தாதர், நைகாவ், அம்பேத்கர் நகர், மின்ட் காலனி, லோயர் பரேல், கரிரோடு, சின்ச்போக்லி வழியாக செல்கிறது.

எனவே செம்பூரில் இருந்து ஜேக்கப் சர்க்கில் வரை இயக்கப்படும் மோனோ ரெயில் சேவைகளுக்கு பொதுமக்கள் இடையே அதிக வரவேற்பு இருக்கும் என போக்குவரத்து வல்லுனர்கள் கூறுகின் றனர்.

இந்தநிலையில் வடலா - ஜேக்கப் சர்க்கிள் இடையே மோனோ ரெயில் சேவை தொடங்க உள்ளது குறித்து தாதரை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘‘பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த திட்டம் நிறைவேறி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டம் மூலம் கிழக்குப்புற நகர் பகுதியில் இருந்து மத்திய மும்பைக்கு எளிதில் வந்து செல்ல முடியும்’’ என்றார்.

Next Story