உஷாரய்யா உஷாரு..
அவளது தந்தையும், தாயும் தொழிற்துறை பின்னணிகொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதிக வசதி படைத்தவர்கள்.
அவளது தந்தையும், தாயும் தொழிற்துறை பின்னணிகொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதிக வசதி படைத்தவர்கள். அவளுக்கு தனது தந்தை சேர்த்துவைத்த பணத்தை அனுபவிக்கவும், அவரது தொழிலை தொடர்ந்து நடத்தவும் விருப்பம் இருந்ததில்லை. நிறைய படித்து, தனது அறிவாற்றலால் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் நிறுவனம் ஒன்றில் உயர்ந்த பதவியை எட்டிப்பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். மகளின் அந்த ஆசையை நிறைவேற்றிக்கொடுப்பதற்காக தந்தையும் அவள் விரும்பியதுபோல் எல்லாம் படிக்க வைத்தார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அவள் படித்து முடித்த பின்பு அவள் எதிர்பார்த்தபடியே சர்வதேச வங்கி ஒன்றில் அவளுக்கு உயர்ந்த பதவி கிடைத்தது.
அவள் வகித்து வந்த பதவி தொடர்பாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறக்கவேண்டிய வேலையும் இருந்தது. வேலையிலே ‘பிசி’யாக இருந்ததால், அவளுக்கு திருமண சிந்தனையே எழவில்லை. அதற்குள் வயது 30-ஐ தொட்டுவிட்டது.
வங்கியில் அவள் செல்வாக்குமிக்க பதவியில் இருந்ததால், அவளை தங்கள் வீட்டு மருமகளாக்கினால், அது தங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு அடிகோலும் என்று இன்னொரு தொழிலதிபர் குடும்பம் நினைத்தது. அதனால் அவர் தனது மகனுக்கு, அவளை மணமுடிக்க நினைத்தார்.
ஆனால் அந்த இளைஞனை தனக்கு மாப்பிள்ளையாக்க அவள் விரும்பவில்லை. ஏன்என்றால் அவன், அவளைவிட இரண்டு வயது இளையவன். மகன் தனது குடும்பத் தொழிலுக்கு வாரிசாக வரவேண்டும் என்று அவனது தந்தை விரும்பியதால், கல்லூரி படிப்போடு நிறுத்திவிட்டு, தனது நிறுவன பொறுப்புக்கு அவனை கொண்டுவந்துவிட்டார். அவன் முதலாளி தோரணையிலே நடந்துகொண்டதாலும், புதிய சிந்தனை, உலகளாவிய அனுபவம் எதுவும் அவனிடம் இல்லாமல் இருந்ததாலும் அவள், அவனை நிராகரித்தாள். ஆனால் அவளது பெற்றோர், அவனை திருமணம் செய்துகொள்ளும்படி அவளிடம் தொடர்ந்து வற்புறுத்தினார்கள். ‘உனக்கு 30 வயதாகிவிட்டது. இந்த மாப்பிள்ளை ஓரளவு பிரபலமான தொழிற்குடும்பத்தை சேர்ந்தவர். இனி இவரைவிட சிறந்த மாப்பிள்ளையை எங்களால் தேட முடியாது. திருமணம் செய்துகொள்ளாமலே உன்னால் வாழவும் முடியாது. அதனால் இவரையே திருமணம் செய்துகொள்’ என்றார்கள்.
அரைகுறை மனதோடு அவள் திருமணத்திற்கு சம்மதித்தாள். ஆடம்பரமாக அவர்கள் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் புதுமணத்தம்பதிகள் இடையே கசப்புணர்வு வந்துவிட்டது.
‘நான் மணிக்கணக்கில் சும்மாவே சொகுசாக இருந்து பழக்கப்பட்டவன். அவள் ஒரு நிமிடத்தைகூட வீணாக்காமல் பரபரப்பாக செயல்படுகிறாள். கல்வி, அனுபவம், மொழிப்புலமைகளிலும் அவள் என்னைவிட உயர்ந்த நிலையில் இருக்கிறாள். ஆண்களிடம் கைகுலுக்குகிறாள். அவர்களது உடலை தொட்டுப் பேசுகிறாள். அவளுடன் படித்த மாணவர்கள் போன்றவர்களை கட்டிப்பிடிக்கவும் செய்கிறாள். எனக்கும், அவளுக்கும் பொருத்தம் இ்ல்லை’ என்று தனது தந்தையிடம் கூறி, சுமுகமாக பேசி, எங்களை பிரித்துவிட்டுவிடுங்கள் என்று கூறியிருக்கிறான்.
தந்தையோ, தனது மருமகளை பயன்படுத்தி தனது தொழிலை மேலும் வளர்த்துவிட விரும்புவதால், ‘அவளை விவாகரத்து செய்ய நான் அனுமதிக்கமாட்டேன். அவள் நிறைய படித்தவள். அவள் லெவல் வேறு. நமது குடும்ப அந்தஸ்தை மேம்படுத்த அவள் அவசியம். நீ அவளை அனுசரித்துபோவதுதான் நமது குடும்பத்திற்கு நல்லது’ என்று கூறி ஆறப்போட்டிருக்கிறார்.
கணவர் தன்னிடம் மனப்பூர்வமாக நெருக்கம்காட்டவில்லை என்பதை உணர்ந்த அவள், ‘நீங்களாக எந்த முடிவு எடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு, வெளிநாட்டுக்கு பணிமாற்றம் வாங்கிவிட்டு சென்றுவிட்டாள். இதுவரை அவர்களுக்குள் ‘சாந்தி முகூர்த்தம்’ நடக்கவில்லை.
பணத்தில் மட்டுமல்ல, படிப்பிலும், அந்தஸ்திலும் இருவரும் சமமாக இருந்தால்தான் இல்லறம் இனிக்கும் என்பதை எல்லோரும் புரிஞ்சுக்கணுங்க..!
- உஷாரு வரும்.
Related Tags :
Next Story