பனிச்சறுக்குக்கு தங்கப்பதக்கம்
பெண்களுக்காக நடத்தப்படும் அல்பைன் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார், 15 வயது சிறுமி மலாய்க்கா குல் தேவ்.
பெண்களுக்காக நடத்தப்படும் அல்பைன் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார், 15 வயது சிறுமி மலாய்க்கா குல் தேவ். பனிச்சறுக்கு விளையாட்டில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த போட்டி, இந்த ஆண்டு தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்தது. இதில் 55 நாடுகளை சேர்ந்த 155 பேர் பங்கேற்றார்கள்.
பனிச்சறுக்கு விளையாட்டில் அசத்தும் திறமையான பெண்களுக்கு சவால் விடும் விதத்தில் சிறுமி மலாய்க்கா சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார். காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இவர் ஸ்ரீநகரில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அவரது தந்தை குல் தேவ் பக்க பலமாக இருந்து மூன்று வயது முதலே மலாய்க்காவுக்கு பயிற்சி அளித்து வருகிறார். குல் தேவ் 1988-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர். காஷ்மீர் மாநிலத்தில் இருந்து முதன் முதலாக ஒலிம்பிக் களத்தில் காலடி வைத்தவர் என்ற சிறப்பும் பெற்றவர். தன்னை போல் மகளையும் பனிச்சறுக்கில் சாதனை படைக்க வைத்து விட்டார்.
‘‘சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றது சிறந்த தருணம். நான் இந்த அளவுக்கு சாதிக்க என் தந்தைதான் காரணம். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்’’ என்கிறார், மலாய்க்கா.
கடந்த சில ஆண்டுகளாகத்தான் மலாய்க்கா போட்டிகளில் தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இவர் சமீபத்தில் ரஷியாவில் நடந்த குழந்தைகளுக்கான முதல் ஆசிய நீர் விளையாட்டு போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். இதற்காக 15 பேர் கொண்ட இந்திய அணியிலும் இடம் பிடித்தார். ஆனால் காயம் காரணமாக அவரால் போட்டியை முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தந்தைக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பது மலாய்க்காவின் விருப்பமாக இருக்கிறது.
Related Tags :
Next Story