வாகன சோதனையில் நிற்காமல் சென்ற மினி லாரி டிரைவரை தாக்கிய முதல்நிலை காவலர் பணியிடை நீக்கம் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவு


வாகன சோதனையில் நிற்காமல் சென்ற மினி லாரி டிரைவரை தாக்கிய முதல்நிலை காவலர் பணியிடை நீக்கம் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவு
x
தினத்தந்தி 4 March 2019 4:00 AM IST (Updated: 3 March 2019 11:15 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் வாகன சோதனையில் நிற்காமல் சென்ற மினி லாரி டிரைவரை தாக்கிய முதல்நிலை காவலர் தங்கராஜை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

வேலூர்,


வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக தங்கராஜ் பணிபுரிந்து வந்தார். வேலூர் வடக்கு போலீசார் கடந்த மாதம் 24-ந் தேதி இரவு மீன்மார்க்கெட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனையிட முயன்றனர். ஆனால் அந்த மினி லாரி நிற்காமல் வேலூர் நகரை நோக்கி சென்றது.

இதையடுத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த முதல்நிலை காவலர் தங்கராஜ், மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று நேதாஜி மார்க்கெட்டில் அந்த மினி லாரியை மடக்கி பிடித்தார். பின்னர் தங்கராஜ், மினி லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினார். அதில், அவர் ஜோலார்பேட்டையை சேர்ந்த பெருமாள் என்பதும், திருப்பத்தூரில் இருந்து வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு காய்கனிகள் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து தங்கராஜ், மினி லாரி டிரைவர் பெருமாளிடம் ஏன் லாரியை நிறுத்தவில்லை என்று கேட்டார். அதற்கு அவர் இரவு நேரத்தில் போலீசார் மினி லாரியை நிறுத்தி லஞ்சம் கேட்கிறார்கள். எனவே நிறுத்தாமல் வந்து விட்டேன் என்று கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக தங்கராஜிக்கும், பெருமாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த தங்கராஜ், பெருமாளை தாக்கினார்.

இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்நிலை காவலர் தங்கராஜ், லாரி டிரைவர் பெருமாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்து, வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த சம்பவம் போலீசார், பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக அவர் விசாரிக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விசாரணையில், தங்கராஜ் வாகன சோதனையில் நிற்காமல் சென்ற லாரி டிரைவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியது உறுதியானது.

இதையடுத்து முதல்நிலை காவலர் தங்கராஜை, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் வாகன சோதனையின்போது மினி லாரியை நிறுத்தாமல் ஓட்டி சென்ற பெருமாள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story