தமிழக அரசு நிதி உதவியுடன் ஜெருசலேம் புனித பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
‘தமிழக அரசின் நிதி உதவியுடன், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்‘ என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேனி,
தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு தமிழக அரசால் நபர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிதிஉதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்த புனித பயணம் பெத்லகேம், ஜெருசலேம், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இந்த பயணம், மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் ஆகும்.
விண்ணப்பம் அளிப்பவர்கள், பயணம் மேற்கொள்ள விரும்பும் மாதத்தை விண்ணப்பத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை www.bc-m-b-c-mw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ளது. அதை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேவையான சான்றுகளை இணைத்து, ‘மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், கலசஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-05’ என்ற முகவரிக்கு வருகிற 15-ந்தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் உறையின் மேல், ‘கிறிஸ்தவர்கள் புனித பயணத்துக்கான விண்ணப்பம்’ என்று குறிப்பிட வேண்டும். எனவே தேனி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story