ஈஞ்சம்பாக்கத்தில் பெயிண்டர் அடித்துக்கொலை? புகாரை வாங்க மறுத்து போலீசார் அலைக்கழிப்பு


ஈஞ்சம்பாக்கத்தில் பெயிண்டர் அடித்துக்கொலை? புகாரை வாங்க மறுத்து போலீசார் அலைக்கழிப்பு
x
தினத்தந்தி 4 March 2019 3:45 AM IST (Updated: 3 March 2019 11:43 PM IST)
t-max-icont-min-icon

ஈஞ்சம்பாக்கத்தில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரை வாங்க மறுத்து போலீசார் அலைக்கழித்ததால் பெயிண்டரின் மனைவி மற்றும் உறவினர்கள் சிரமப்படுகிறார்கள்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அக்கரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 35), பெயிண்டர். இவரது மனைவி அமுதா (30). நேற்று முன்தினம் மாலை ஞானசேகரன் நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக மனைவியிடம் கூறி சென்றார்.

ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து அமுதாவிற்கு போன் வந்தது. அதில் பேசியவர்கள், ‘உங்களது கணவர் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் காயங்களுடன் கிடந்தார். அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்’ என்று தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அமுதா, உறவினர்களை அழைத்துக்கொண்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஞானசேகரனை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் ஞானசேகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், தாக்கப்பட்டதால் தான் அவர் இறந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஞானசேகரனின் உறவினர்கள் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், ஞானசேகரன் அடித்துக்கொலை செய்யப்பட்டு உள்ளார் எனவும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர் கார் மோதி இறந்ததாக கூறிய போலீசார், புகாரை வாங்க மறுத்து விட்டனர். மேலும் விபத்து என்பதால் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

இதையடுத்து அடையாறு போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு சென்றபோது, கொலை செய்யப்பட்டு இருப்பதாக கூறுவதால், நீலாங்கரை போலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு கூறி அலைக்கழித்தனர்.

ஞானசேகரனின் உறவினர்கள் என்ன செய்வது? என தெரியாமல் நீலாங்கரை போலீஸ் நிலையம் முன்பு காத்திருந்தனர். உடல் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ள நிலையில், போலீசார் புகார் வாங்க மறுத்து அலைக்கழிப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Next Story