ரூ.6 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளத்தை திறக்க வேண்டும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.6 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கில் நீச்சல் குளம், கூடைப்பந்து மைதானம், உள்விளையாட்டு அரங்கம் உள்ளன. இந்த நிலையில் இங்கு சர்வதேச அளவிலான செயற்கை இழை(சிந்தடிக்) ஓடுதளம் அமைக்கும் பணி ரூ.4½ கோடியிலும், ரூ.1½ கோடியில் உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கும் பணியும் நடந்தது. செயற்கை இழை ஓடுதளத்தில் மழை மற்றும் வெயில் ஆகிய 2 பருவ நிலைகளிலும் விளையாட முடியும்.
இந்த செயற்கை இழை ஓடுதளம் விளையாட்டு மைதானத்தில் தேசிய விளையாட்டு போட்டி, சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும். இதனால் இங்கு பயிற்சி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் விளையாட உதவியாக இருக்கும். ஏற்கனவே சென்னை, கோவை, ஊட்டி, திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது கூடுதலாக இங்கு செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்பட்டு உள்ளதால் அருகில் உள்ள வேலூர், விழுப்புரம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்களும் இங்கு வந்து பயிற்சி பெற ஏதுவாக இருக்கும்.
அதேபோல் மின்னொளியில் இரவு நேரங்களில் போட்டிகள் நடத்த விளையாட்டு மைதானத்தில் 4 திசைகளிலும் உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளது.
மேலும் இரவு நேரங்களில் போட்டிகளும் நடத்த முடியும். தேசிய அளவிலான போட்டிகள் நடத்த இந்த விளைாட்டு அரங்கம் இனி பயன்படுத்தப்படும். இந்த நிலையில் மாவட்ட விளையாட்டு அரங்கில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்பட்டு வெகு நாட்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்க இன்னும் சில நாட்களே உள்ளதால் அதற்குள் செயற்கை இழை ஓடுதளம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story