தேர்தல் பாதுகாப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது


தேர்தல் பாதுகாப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 3 March 2019 11:00 PM GMT (Updated: 3 March 2019 6:35 PM GMT)

தேர்தல் பாதுகாப்பு பணி குறித்த போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம்,

இந்திய தேர்தல் கமிஷன் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முழுவீச்சி மேற்கொண்டு வருகிறது. எனவே எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்கிற சூழல் உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிசெய்பவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அன்த வகையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட இடங்களில் புதிய போலீசார் பணியில் இருந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.இதற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

அப்போது, அவர் பேசிய தாவது:-

வெளி மாவட்டங்களிலிருந்து வந்துள்ள போலீசார் தற்போதே தங்கள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பதற்றமான பகுதிகள், வாக்குச்சாவடிகள், அரசியல் பிரமுகர்கள் பற்றிய விவரங்களை தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தேர்தலின் போது பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுப்பதற்கு எளிதாக இருக்கும்.

மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருந்தால் உடனே அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும்.

தற்போது டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பாக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அனுமதியில்லாமல் டிஜிட்டல் பேனர் வைத்தால், அதை உடனடியாக அகற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளை நடக்காமல் இருக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்தலை தடுக்க அனைத்து சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும்.

தங்களுக்கு தரும் பணிகளை போலீசார் தங்களது கடமையாக நினைத்து செய்ய வேண்டும், கடமைக்காக செய்ய வேண்டாம். எனவே அனைத்து போலீசாரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Next Story