திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது இன்று மகா சிவராத்திரி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விழா நாட்களிலும் மற்றும் பவுர்ணமி நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மற்றும் பிரதோஷம் என்பதால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மேலும் நேற்று மாலை கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) கோவிலில் மகா சிவராத்திரியை யொட்டி கோவிலில் மலர் அலங்காரம், மின் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இன்று காலை கோவிலில் தேவாரப்பாடல்கள் இன்னிசை, பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை பரதநாட்டிய நிகழ்ச்சிகளும், சாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 11.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், இரவு 12 மணி அளவில் லிங்ககோத்பவதூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 2.30 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story