பெருந்துறை அருகே பரபரப்பு குடிநீர் தொட்டி பகுதியில் குழி தோண்டி குழாயை இணைத்த பொதுமக்கள்
பெருந்துறை அருகே குடிநீர் தொட்டி பகுதியில் குழி தோண்டி அங்குள்ள குழாயை பொதுமக்களே இணைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருந்துறை,
பெருந்துறை அருகே உள்ள சின்ன வீரசங்கிலி ஊராட்சிக்கு உள்பட்ட கிராமம் பெரிய வீரசங்கிலி. இந்த கிராமத்தில் 1,000–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு புதிய திருப்பூர் குடிநீர் திட்டத்தின் கீழ் காவிரி ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கடந்த 2 மாதங்களாக அங்குள்ளவர்களுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும் எனக்கோரி இங்குள்ளவர்கள் ஊராட்சி செயலாளரிடம் புகார் மனு அளித்தனர். எனினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கூட வளாகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியின் கீழ் பகுதியில் குழி தோண்டி பார்த்தனர். அப்போது குடிநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் உபரிநீர் குழாய் துண்டிக்கப்பட்டு அது அடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் உபரிநீர் வெளியேறும் குழாயை, மெயின் குழாயுடன் இணைத்தனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘ஏற்கனவே உபரிநீர் வெளியேறும் குழாயானது, மெயின் குழாயுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் யாரோ உபரிநீர் குழாயை துண்டித்துவிட்டனர். இதனால்தான் குடிநீர் சீராக வினியோகம் செய்ய முடியவில்லை. மேலும் பொதுமக்களுக்கு எதிராக செயல்படும் ஊராட்சி செயலாளரை மாற்றம் செய்யக்கோரி பெருந்துறை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்படும்,’ என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.