நர்மதையில் இருந்து சென்னிமலைக்கு கொண்டுவரப்பட்ட 360 கிலோ எடையுள்ள சிவலிங்க வடிவ கல் பயபக்தியுடன் பார்த்து சென்ற பக்தர்கள்


நர்மதையில் இருந்து சென்னிமலைக்கு கொண்டுவரப்பட்ட 360 கிலோ எடையுள்ள சிவலிங்க வடிவ கல் பயபக்தியுடன் பார்த்து சென்ற பக்தர்கள்
x
தினத்தந்தி 3 March 2019 10:15 PM GMT (Updated: 3 March 2019 6:51 PM GMT)

நர்மதை ஆற்றில் இருந்து சென்னிமலைக்கு கொண்டுவரப்பட்ட 360 கிலோ எடையுள்ள சிவலிங்கம் வடிவிலான கல்லை பக்தர்கள் பயபக்தியுடன் பார்த்து சென்றனர்.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிழக்கு புது வீதியை சேர்ந்தவர் சரவணன். இவர் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சித்தர்களை நினைத்து வாய்ப்பாடி வனப்பகுதி கோவில் மற்றும் மணிமலை கருப்பணசாமி கோவிலில் 48 நாட்கள் மவுன விரதம் இருந்தார். இதனால் அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சரவண சித்தர் என அழைப்பது உண்டு.

இந்த நிலையில் நர்மதை ஆற்றில் இருந்து கிடைத்த 360 கிலோ எடையுள்ள சிவலிங்கம் வடிவிலான கல்லை சரவணன், லாரி மூலம் சென்னிமலையில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் அதை வீட்டின் பூஜை அறையில் வைத்து உள்ளார்.

இதுகுறித்து சரவணன் கூறுகையில், ‘மத்திய பிரதேச மாநிலம் வழியாக செல்லும் நர்மதை ஆற்றில் இருந்து சிவலிங்கம் கொண்டு வந்து பூஜை செய்யும்படி கனவில் தோன்றி சித்தர்கள் எனக்கு உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்று நர்மதை ஆற்றில் சிவலிங்கம் வடிவிலான கல் எடுக்கும் நபர்களை சந்தித்து பெரிய அளவிலான சிவலிங்க கல் வேண்டும் என்று கூறினேன்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நர்மதை ஆற்றில் இருந்து சிவலிங்கம் வடிவிலான பெரிய கல் கிடைத்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் எனக்கு தெரிவித்தனர். இதையடுத்து நான் அங்கு சென்று பார்த்தபோது அந்த சிவலிங்கம் வடிவிலான கல் 42 அங்குல உயரத்திலும், 54 அங்குல சுற்றளவிலும், 360 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது.

உடனே அதை ரூ.60 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கி லாரி மூலம் சென்னிமலைக்கு கொண்டு வந்து விட்டேன். ஒரே கல்லில் உளி மூலம் செதுக்காமல் இதுபோன்ற கல் யாருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. இந்த சிவலிங்கத்தை சிவராத்திரி அன்று பிரதிஷ்டை செய்ய இருந்தோம். ஆனால் நாட்கள் இல்லாததால் சித்ரா பவுர்ணமி அன்று பிரதிஷ்டை செய்ய உள்ளோம்,’ என்றார்.

இந்த கல்லை சென்னிமலை பகுதியை சேர்ந்த பக்தர்கள் பயபக்தியுடன் பார்த்து செல்கிறார்கள்.


Next Story