குத்தாலம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்


குத்தாலம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 4 March 2019 4:00 AM IST (Updated: 4 March 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கிராம மக்கள் சீர்வரிசை பொருட்கள் வழங்கினர்.

குத்தாலம்,

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே கடக்கத்தை அடுத்த அகரஆதனூரில் அரசு நடுநிலைப்பள்ளி இருந்தது. இந்த பள்ளி கடந்த ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளியின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், புதுமண தம்பதியினருக்கு வழங்குவது போல் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர். இந்த சீர்வரிசையில் தேச தலைவர்களின் புகைப்படங்கள், நோட்டு-புத்தகங்கள், சாக்பீஸ், நாற்காலி, குப்பைத்தொட்டி, துடைப்பம், தண்ணீர் கேன்கள் ஆகிய பொருட்கள் இருந்தன.

இந்த பொருட்களை கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள சிவன் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று பள்ளியை அடைந்தனர். பின்னர் கிராம மக்கள், சீர்வரிசை பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியை ஐரின் ஜெயராணியிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆங்கில மொழியில் ஏற்பட்ட மோகம் காரணமாக பெற்றோர்கள், அதிக அளவில் கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி, அகர ஆதனூர் கிராம மக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

Next Story