தஞ்சையில் விவசாயிகளுக்கு ரூ.6½ கோடியில் வேளாண்மை எந்திரங்கள் அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்


தஞ்சையில் விவசாயிகளுக்கு ரூ.6½ கோடியில் வேளாண்மை எந்திரங்கள் அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்
x
தினத்தந்தி 4 March 2019 4:30 AM IST (Updated: 4 March 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் விவசாயிகளுக்கு ரூ.6½ கோடியில் வேளாண்மை எந்திரங்களை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் மூலம் கூட்டுப்பண்ணைய திட்ட குழுக்களுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கும்விழா நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மைத்துறை இணை இயக்குனர் நெடுஞ்செழியன் வரவேற்றார்.

இதில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு 100 உழவர் குழுக்களுக்கு ரூ.6 கோடியே 21 லட்சம் மதிப்பில் 261 வேளாண்மை எந்திரங்களையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 உழவர் குழுக்களுக்கு ரு.26 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் 14 எந்திரங்களையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, இந்தியாவிலேயே தமிழகம் வேளாண்மைத்துறையில் முன்னோடியாக திகழ்கிறது. 3 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் தொடர்ந்து 5 முறை நெல் கொள்முதல் செய்து வரலாற்று சாதனை செய்துள்ளோம். உணவு உற்பத்திக்காக 4 முறை மத்தியஅரசின் விருது பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் வேளாண்மை கருவிகளை பெற்று 2 மடங்கு உற்பத்தி 3 மடங்கு வருமானத்தை பெற்று வாழ வேண்டும் என்று கூறினார்.

வைத்திலிங்கம் எம்.பி. பேசும்போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வரவு வைக்கப்பட்ட பணம் திரும்பி வந்துள்ளது. ரூ.4 கோடிக்கு மேல் திரும்பி வந்துள்ளதால் அதை சரி செய்து மீண்டும் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப் படும். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு என்றைக்கும் துணை நிற்கும் என்று கூறினார்.

விழாவில் மாவட்ட பால்வளத தலைவர் காந்தி, நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குனர் சரவணன், காவேரி சிறப்பு அங்காடி முன்னாள் தலைவர் பண்டரிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் மோகன், வேளாண்மைத்துறை துணை இயக்குனர்கள் கணேசன், ஜஸ்டின், கணேசன் மற்றும் உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை துணை இயக்குனர் மீனாட்சி சுந்தரம், வேளாண்மை அலுவலர் கவிதா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Next Story