குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: துள்ளிக்குதித்த காளைகளை துரத்தி பிடித்த வீரர்கள்
குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் துள்ளிக் குதித்து சென்ற காளைகளை மாடுபிடி வீரர்கள் துரத்தி பிடித்தனர்.
குமாரபாளையம்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வளையக்காரனூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இந்த போட்டியினை பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர். சரோஜா, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் அமைச்சர் தங்கமணி தலைமையில் உறுதிமொழியினை ஏற்றார்கள். இந்்்்நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னையன்், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம்்்், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 470 காளைகளும், 348 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அழைத்து ஓட விடப்பட்டது. காளைகள் மைதானத்தில் துள்ளிக்குதித்து சென்றன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் துரத்தி சென்று பிடித்தனர். அப்போது சில காளைகள் பிடிக்க முயன்ற காளையர்களை கொம்புகளால் தூக்கி வீசி பந்தாடியது. இதில் வீரர்கள் சிலர் லேசான காயம் அடைந்தனர். போட்டி நடைபெறும் மைதானத்தில் மாடுபிடி வீரர்கள் வருவதற்கு தனியாக பாதை, மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் இரும்பு தடுப்பு, காளைகள் வெளியேறும் இடத்தில் அதன் உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
மேலும் ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை பரிசோதனை செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல், மருத்துவ குழுவினர், அவசர சிகிச்சை அளிக்க தனியாக சிறப்பு அவசர சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்களின் பயன்பாட்டிற்காக நவீன நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், திருச்செங்கோடு தாசில்தார் இலாகிஜான், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பொன்னுவேல், குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story