தஞ்சை மாவட்டத்தில் 20 மையங்களில் குரூப்-1 தேர்வு 4,124 பேர் எழுதினர்


தஞ்சை மாவட்டத்தில் 20 மையங்களில் குரூப்-1 தேர்வு 4,124 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 4 March 2019 4:15 AM IST (Updated: 4 March 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 20 மையங்களில் நடந்த குரூப்-1 தேர்வை 4,124 பேர் எழுதினர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 முதன்மை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 20 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத 5,636 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று 4,124 பேர் தான் இந்த தேர்வை எழுதினர். 1,512 பேர் தேர்வு எழுதவில்லை.

தஞ்சை பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எல்லா அறைகளிலும் உலக வரைபடம் எதுவும் ஒட்டப்படவில்லையே. அதில் இருந்து கேள்வி கேட்க வாய்ப்பு இருக்கிறது என கண்காணிப்பு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அதற்கு அவர்கள், ஒட்டப்பட்டிருந்த உலக வரைபடத்தையும் அகற்றிவிட்டோம் என்று பதில் அளித்தனர். பின்னர் கலெக்டர் அண்ணாதுரை கூறும்போது, தேர்வில் தவறுகள் நடைபெறாமல் அலுவலர்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தேர்வு தொடங்கிய ½ மணிநேரம் வரை தாமதமாக வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதற்கு பிறகு வந்தவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. செல்போன், ஐபேட், கால்குலேட்டர் மற்றும் அதிநவீன மின்னணு சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

Next Story