நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்லம் புதுப்பிக்கும் பணி தொடக்கம்
நாமக்கல்லில் உள்ள கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் நினைவு இல்லத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி அம்மணியம்மாள். இந்த தம்பதிக்கு கடந்த 1888-ம் ஆண்டு மகனாக பிறந்தவர் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. நாமக்கல் கவிஞர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த இவர், 1930-ல் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ராஜாஜியுடன் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை நடைபயணமாக சென்றார்.
அப்போது இவர் பாடிய கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற பாடல் வழிநடை பாடலாக அமைந்தது. மேலும் தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்ற கவிஞரின் வரிகள் தமிழில் நாட்டுபற்றையும், தமிழ் உணர்வையும் மக்களிடையே வளர்த்தது.
நாமக்கல் நகரின் மையபகுதியில் இவர் வாழ்ந்து வந்த வீடு உள்ளது. இந்த நினைவு இல்லம் 29.1.1998-ம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்டு, 21.1.2000-ம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. பின்னர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் 400 சதுரஅடி பரப்பளவில் பொது நூலகம் அமைக்க அரசு ஆணை வெளியிட்டது.
அந்த நூலகம் 22.12.2006-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் சுமார் 8 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் நினைவு இல்லத்தை சுமார் ரூ.2 லட்சம் செலவில் புதுப்பிக்க அரசு முடிவு செய்து உள்ளது.
இதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. இந்த நிதியில் இருந்து இல்லத்தின் மேல் பகுதி வர்ணம் பூசப்பட்டு, முன்புறத்தில் பளிங்கு கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story