மேலமைக்கேல்பட்டியில் ஜல்லிக்கட்டு: போட்டி போட்டு காளைகளை அடக்கிய வீரர்கள்


மேலமைக்கேல்பட்டியில் ஜல்லிக்கட்டு: போட்டி போட்டு காளைகளை அடக்கிய வீரர்கள்
x
தினத்தந்தி 3 March 2019 11:00 PM GMT (Updated: 3 March 2019 8:08 PM GMT)

மேலமைக்கேல்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் காளைகளை போட்டி போட்டு அடக்கினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் புனித சந்தன மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி விழாகுழுவினர் சார்பில் வாடிவாசல் அமைத்து தெருவின் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி ஜல்லிக்கட்டு உறுதி மொழியினை வாசிக்க அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்ட பின் ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதல் காளையாக புனித சந்தன மாதா கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

ஜல்லிக்கட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறி பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். இதில் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்களாக பீரோ, கட்டில், குத்துவிளக்கு, குக்கர், மின்விசிறி, சைக்கிள், குடம், தங்க மோதிரம், வெள்ளி பொருட்கள், ரூ.ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை ரொக்கம் உள்பட பல்வேறு பரிசுகளை வழங்கினர்.

இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 17 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் காளைகளுக்கு காயம் அடைந்தால் அவற்றை சரிசெய்யும் வகையில் கால்நடைத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் திருச்சி, ஸ்ரீரங்கம், பொய்யூர், லால்குடி, கீழமைக்கேல்பட்டி, அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, உட்கோட்டை, விழப்பள்ளம், பிராஞ்சேரி, பிச்சனூர், மாதாபுரம், பூவானிப்பட்டு, நவல்பட்டு, சூரியூர், மாதாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் வந்திருந்தன. ஜல்லிக்கட்டை சுற்றுப்பகுதிகளில் இருந்து வந்த ஏராளமாக பொதுமக்கள் கண்டு களித்தனர். இதில் சிலர் கட்டிடங்கள், மரக்கிளைகள் மீது ஏறி அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், சந்திரகலா, செல்வகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தினேஷ்குமார், ஸ்ரீதர், வசந்த் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

Next Story