குமாரபாளையம் அருகே விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு; விவசாயிகள் உண்ணாவிரதம்
குமாரபாளையம் அருகே விவசாய நிலங்களில் உயர்மின்கோ புரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு சாமாண்டூர் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான தொடர் போராட்டம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. பின்னர் அவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் விவசாயிகளின் கோரிக்கையினை பரிசீலிக்காமல் மீண்டும் உயர் மின்கோபுரம் அமைக்க நில அளவீடு செய்யப்பட்டது. இதனை கண்டித்து விவசாயிகள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாய சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நில மதிப்பிற்கேற்ப முறையான இழப்பீடு வழங்க வேண்டும், சாலையோரங்களில் புதைவட கம்பிகள் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும், உயர் மின்கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஆண்டு வாடகையும் வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் மீண்டும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் 50 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story