திருச்சுழி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்: 8 மாத குழந்தையுடன் தந்தை பலி வாலிபரும் உயிரிழந்த பரிதாபம்
திருச்சுழி அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 8 மாத கைக்குழந்தை, அதன் தந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.
திருச்சுழி,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சூரியகுமார் (வயது27). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மனைவி ஐஸ்வர்யா, 8 மாத மகன் ரட்சகன் மற்றும் தங்கை நாகவல்லி ஆகியோருடன் மோட்டார் சைக் கிளில் திருச்சுழி நோக்கி வந்து கொண்டிருந்தார். குழந்தை ரட்சகனை மடியில் வைத்தபடி ஐஸ்வர்யா பயணம் செய்தார்.
திருச்சுழி பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே தங்கமணி (32) என்பவரும் கந்தசாமி என்பவரும் மற்றொரு மோட்டார்சைக்கிளில் குண்டுகுளம் நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் சூரிய குமார், 8 மாத கைக்குழந்தை ரட்சகன் மற்றும் தங்கமணி ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் கந்தசாமி, ஐஸ்வர்யா, நாகவல்லி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தார்கள். இவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து திருச்சுழி போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.
விபத்தில் இறந்த தங்கமணியும் படுகாயம் அடைந்த கந்தசாமியும் தேனி மாவட்டம் அத்திப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள். இருவரும் குண்டுகுளம் பகுதியில் தங்கி இருந்து கட்டிடவேலை செய்து வந்தனர்.
Related Tags :
Next Story