ராஜபாளையம் அருகே குவாரியில் மூழ்கி பலி: சிறுவர்கள் உடலை பரிசோதனைக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்


ராஜபாளையம் அருகே குவாரியில் மூழ்கி பலி: சிறுவர்கள் உடலை பரிசோதனைக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்
x
தினத்தந்தி 4 March 2019 4:45 AM IST (Updated: 4 March 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

கல்குவாரியில் மூழ்கிய 2 சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. உடல் பரிசோதனைக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் சத்திரப்பட்டி அருகே வேலாயுதபுரத்தில் கானாங்குளம் கண்மாய் பகுதியில் கல்குவாரி உள்ளது. இதில் எப்போதும் தண்ணீர் இருக்கும். நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த மாணவர்கள் 6 பேர் பள்ளி முடிந்ததும் குவாரியில் குளிக்கச் சென்றனர்.

இதில் சமுசிகாபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் வெற்றி கணேஷ்(வயது11), வேலாயுதபுரத்தை சேர்ந்த முனியசாமி என்பவரது மகன் கார்த்திகேயன் (11) ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்க முயன்றும் முடியவில்லை. ராஜபாளையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து இரவில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதிலும் பலனில்லை. இதனால் மீட்பு பணியை காலையில் தொடங்க முடிவெடுத்தனர்.

அதன்படி நேற்று காலை 7 பேர் கொண்ட தீயணைப்பு துறையினர் சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் உயிரிழந்த நிலையில் கார்த்திகேயனின் உடல் மீட்கப்பட்டது. ராஜபாளையம் தெற்கு போலீசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தனர்.

இதற்கு கார்த்திகேயனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவனின் உடலை பரிசோதனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

இந்த சூழலில் உயிரிழந்த நிலையில் மற்றொரு மாணவன் வெற்றி கணேஷின் உடலும் கல்குவாரியில் இருந்து மீட்கப்பட்டது. அவனது உடலை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

ஆனால் இந்த மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் மாணவனின் உடலை தர மறுத்தனர்.

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சமரசம் செய்து வெற்றி கணேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் பரிசோதனைக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story