டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு: மாவட்டத்தில் 9,760 பேர் எழுதினர்


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு: மாவட்டத்தில் 9,760 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 3 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-04T02:09:17+05:30)

சேலம் மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 9 ஆயிரத்து 760 பேர் எழுதினர்.

சேலம், 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப்-1 அடங்கிய துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் என மொத்தம் 181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் 26 மையங்களில் அமைக்கப்பட்டிருந்த 45 தேர்வு கூடங்களில் குரூப்-1 தேர்வு நடந்தது. இந்த தேர்வைமொத்தம் 13 ஆயிரத்து 446 தேர்வர்கள் எழுத இருந்தனர். அவற்றில் 9 ஆயிரத்து 760 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். மீதமுள்ள 3 ஆயிரத்து 686 பேர் தேர்வு எழுதவில்லை.

காலை 10 மணிக்கு தொடங்கி இந்த தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது. இதற்காக தேர்வு மையங்களுக்கு காலை 7 மணிக்கு தேர்வர்கள் தங்களது ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த மையத்திற்கு வெளியே வந்து காத்திருந்தனர். அவர்கள் கடும் சோதனைக்கு பிறகே காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், கைக்கெடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

தேர்வு மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு நடைபெற்ற மையங்களில் வீடியோ கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது. இதுதவிர, தேர்வு முறைகேடுகளை தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் திடீரென தேர்வு மையங்களுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதுதவிர, வருவாய்த்துறை அலுவலர்களும், பறக்கும்படை அலுவலர்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த குரூப்-1 தேர்வினை மாவட்ட கலெக்டர் ரோகிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தேர்வுமைய அலுவலகத்திற்கு சென்று, வருகை பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

Next Story