‘கோவிந்தா... கோபாலா...’ பக்தி கோஷத்துடன் சிவாலய ஓட்டம் தொடங்கியது


‘கோவிந்தா... கோபாலா...’ பக்தி கோஷத்துடன் சிவாலய ஓட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 4 March 2019 4:15 AM IST (Updated: 4 March 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

கோவிந்தா... கோபாலா... பக்தி கோஷத்துடன், வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது.

கருங்கல்,

மகா சிவராத்திரி விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை ஓடி சென்று தரிசிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் காவி உடை அணிந்து, கையில் விசிறியுடன் 12 கோவில்களுக்கும் ‘கோவிந்தா... கோபாலா...’ என்ற பக்தி கோஷத்துடன் ஓட்டமும், நடையுமாக சென்று வழிபடுவார்கள்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து நேற்று தொடங்கியது. முன்னதாக, பக்தர்கள் கோவில் அருகே உள்ள மங்காடு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். தொடர்ந்து, திருமலை மகாதேவர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு பிரசாதம் பெற்று கொண்டனர்.

பின்னர், அங்கிருந்து வெட்டுமணி, மார்த்தாண்டம் வழியாக 9 கி.மீ. தூரத்தில் உள்ள 2-வது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சென்றனர். கோவில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, கோவிலில் தரிசனம் செய்தனர்.

தொ டர்ந்து, அருமனை, களியல் வழியாக 14 கி.மீ. தூரத்தில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவில், அதைத்தொடர்ந்து திருநந்திக்கரை சிவன் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றி பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், கோழிப்போர் விளை பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் என ஒவ்வொரு கோவிலாக இரவு முழுவதும் ஓட்டமும், நடையுமாக சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

இறுதியாக நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை இன்று (திங்கட்கிழமை) நிறைவு செய்கிறார்கள். இதில் பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.

இந்த ஓட்டத்தில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவி உடை அணிந்து, கையில் விசிறி, விபூதியுடன், ‘கோவிந்தா... கோபாலா...’ என பக்தி கோஷமிட்டபடி கலந்து கொண்டனர். அவர்களுக்கு வழி நெடுகிலும் மோர், சர்பத் போன்றவற்றை பொதுமக்கள் வழங்கினர்.

தற்போது மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களிலும் பக்தர்கள் 12 சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்கிறார்கள். இவ்வாறு வாகனங்களில் செல்பவர்கள் இன்று (திங்கட்கிழமை) தங்களது பயணத்தை தொடங்குகிறார்கள். அவர்கள் முன்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து புறப்பட்டு அனைத்து சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து இறுதியில் நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் தங்களின் பயணத்தை முடித்துக்கொள்வார்கள்.

Next Story