1965-ம் ஆண்டு பாகிஸ்தானிடம் சிக்கி விடுவிக்கப்பட்டவர்: போர் கைதியாக இருந்த ஒவ்வொரு நாளும் வேதனையான நாட்களாகும் ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் கரியப்பா பேட்டி


1965-ம் ஆண்டு பாகிஸ்தானிடம் சிக்கி விடுவிக்கப்பட்டவர்: போர் கைதியாக இருந்த ஒவ்வொரு நாளும் வேதனையான நாட்களாகும் ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் கரியப்பா பேட்டி
x
தினத்தந்தி 3 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-04T03:27:26+05:30)

போர் கைதியாக இருந்த ஒவ்வொரு நாளும் வேதனையான நாட்களாகும் என்று 1965-ம் ஆண்டு பாகிஸ்தானிடம் சிக்கி விடுவிக்கப்பட்ட ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் கரியப்பா கூறினார்.

பெங்களூரு, 

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போர் விமான சண்டையில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார். அவர் சென்ற போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் போர் விமானங்கள், அவரை கைது செய்தது. பின்னர் போர் கைதியான அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது.

இதேபோன்ற அனுபவம் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரியைச் சேர்ந்த கரியப்பாவுக்கும் உண்டு. அந்த அனுபவம் பற்றி அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

1965-ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தது. அப்போது நான் விமானப் படையில் ஏர் மார்ஷலாக இருந்தேன். அன்று நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும், இன்றும் எனக்கு அப்படியே ஞாபகம் வருகிறது. அந்த நாட்கள் எனது கண்முன் இன்றும் நன்றாக வந்து செல்கின்றன. 1965-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இதேபோல் ராணுவ விமானங்களில் சென்று பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தகர்த்துவிட்டு, இந்திய விமானப்படை ‘ஏர் பேஸ்’-க்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம்.

அப்போது எங்களை பின்தொடர்ந்து வந்த பாகிஸ்தான் போர் விமானங்கள், என்னுடைய விமானத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தின. இதில் எனது விமானம் 200-க்கும் மேற்பட்ட அடி உயரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. நான் பாராசூட்டை பயன்படுத்தி கீழே விழுந்து உயிர் பிழைத்தேன். நான் வந்த விமானம் கீழே விழுந்து வெடித்து தீப் பிடித்து எரிந்தது.

அப்போது நான் பயங்கரமாக காயம் அடைந்திருந்தேன். என்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் மீட்டு சிகிச்சைக்காக லாகூரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு போர்க்கைதியான எனக்கு 3 வாரங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தினம் காலை 7 மணிக்கு பூரி, டீ, காலை 11.30 மணிக்கு சப்பாத்தி, மாலை 6 மணிக்கு இரவு உணவு ஆகியவற்றை வழங்கி கவனித்தனர். 3 வாரங்களுக்கு பிறகு என்னிடம் அப்போது பாகிஸ்தான் ராணுவ அதிகாரியாக இருந்த அயூப் கான் ரேடியோ மூலம் விசாரணை நடத்தினார். அவர் எனது தந்தை மற்றும் என்னுடைய மகன் ஆகியோரையும் கைது செய்துவிட்டதாகக் கூறி நடித்தார்.

ஆனால் அவர்களை, பாகிஸ்தான் ராணுவம் கைது செய்ய வில்லை என்பது பின்புதான் தெரிந்தது. பின்னர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு நான் பாகிஸ்தானிடம் இருந்து விடுவிக்கப்பட்டேன். போர்க்கைதியாக இருந்த ஒவ்வொரு நாளையும் என்னால் மறக்க முடியாது. அது வேதனை நிறைந்த நாட்கள்.

என்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் ஒரு ராணுவ விமானத்தில் அழைத்து வந்து விடுவித்தனர். நான் 4 மாதங்களுக்கு பிறகுதான் விடுவிக்கப்பட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது. நான் விடுவிக்கப்பட்டபோதும் எனக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அதையடுத்து எனக்கு ஒரு மாதம் விடுமுறை அளித்தனர். ஆனால் அபிநந்தன் வர்தமானும் என்னைப்போல்தான் போர்க்கைதியாக சிக்கிக் கொண்டார் என்று சொல்ல முடியாது.

அப்போது இருந்த கால கட்டம் வேறு. இப்போதுள்ள கால கட்டம் வேறு. இன்று அவர் விடுதலையானது பெரிய விஷயம். பாகிஸ்தானிடம் இருந்து மீண்டு வந்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் அவர் எதிரிகளை துவம்சம் செய்ய தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். அவருடைய மன தைரியத்தை நாம் பாராட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story