பா.ஜனதாவுடன் கொள்கை ரீதியாக கூட்டணி வைக்கவில்லை - தம்பிதுரை பேட்டி


பா.ஜனதாவுடன் கொள்கை ரீதியாக கூட்டணி வைக்கவில்லை - தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 4 March 2019 4:15 AM IST (Updated: 4 March 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவுடன் கொள்கை ரீதியான கூட்டணி வைக்கவில்லை என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியில் பொதுமக்களிடம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிச்சாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் நிலாதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் பாஸ்கரன் வரவேற்றார்.

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 6 மாதங்களுக்குள் 8 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறேன். பின் தங்கிய ஏழை, எளிய மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத்தருதல், அந்த மக்களை முன்னேற்றுவதற்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பா.ஜ.கவுடன் கொள்கை ரீதியாக கூட்டணி வைக்கவில்லை. அ.தி.மு.க. வுக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அதோடு நாங்கள் பா.ஜனதா கொள்கைகள் அனைத்தையும் ஏற்று கொள்ளவில்லை.

தமிழர்களின் உரிமைகள், கலாசாரத்தை பாதுகாக்க அ.தி.மு.க. இயக்கம் இருக்கிறது. அதை நாங்கள் விட்டுக்கொடுக்கமாட்டோம். தேர்தல் கூட்டணி என்பது பா.ஜனதா, அ.தி.மு.க. புதிதாக இணைந்த கூட்டணி அல்ல. கடந்த 1998, 2004 ஆகிய தேர்தல்களில் ஜெயலலிதாவுடன் பா.ஜனதா கூட்டணி வைத்திருந்தார்கள். காலத்திற்கு ஏற்பட கூட்டணி வைத்துள்ளோம்.

எங்கள் பரம எதிரிகள் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தான். 18 ஆண்டுகளாக தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை. ஊழல் செய்தது மட்டுமே மக்களுக்கு தெரியும். தமிழகத்திற்கு நல்லது செய்யாமல் ஊழலை உருவாக்கிய கட்சிகள் தான் தி.மு.க., காங்கிரஸ் ஆகும்.

எங்கள் கூட்டணி என்பது எங்கள் எதிரியை தோல்வி பெற செய்வதற்காகவும், நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி வரவேண்டும் என்பதற்காகவும் ஏற்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிராக மோடி எடுத்த நடவடிக்கைக்கு உலகநாடுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. இது திட்டங்களுக்கான கூட்டணியாக அமைந்திருக்கிறது. ஆகவே சிறுபான்மையின மக்கள் எங்கள் கூட்டணியை எதிர்க்கமாட்டார்கள். மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதித்தது உண்மை. அதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுத்தோம். நாடாளுமன்றத்தையே முடக்கினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து குன்னம்பட்டி, சேணன்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, தம்மணம்பட்டி, கருக்காம்பட்டி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று தம்பிதுரை குறைகளை கேட்டறிந்தார்.

Next Story