பெங்களூருவில் மரம் முறிந்து ஸ்கூட்டர் மீது விழுந்தது கல்லூரி மாணவர் பலி; நண்பர் படுகாயம் உரிய நிவாரணம் வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் அறிவிப்பு
பெங்களூருவில் மரம் முறிந்து ஸ்கூட்டர் மீது விழுந்தது. அந்த ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவர் பலியானதுடன், அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். மாணவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் கங்காம்பிகே அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு இலியாஷ்நகரில் வசித்து வந்தவர் முகமது உமைத்(வயது 17). இவர், தனியார் கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய நண்பர் உமைத் பாட்ஷா. நேற்று முன்தினம் இரவு முகமது உமைத், உமைத் பாட்ஷா ஆகிய 2 பேரும் குமாரசாமி லே-அவுட் அருகே வசிக்கும் தங்களது நண்பரை பார்த்து விட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டனர். ஸ்கூட்டரை முகமது உமைத் ஓட்டினார். இரவு 10 மணியளவில் பனசங்கரி அருகே கதிரேனஹள்ளி கிராஸ், ரிங் ரோட்டில் 2 பேரும் வந்து கொண்டிருந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று சாலையோரம் நின்ற மரம் முறிந்து ஸ்கூட்டரில் சென்ற முகமது உமைத், உமைத் பாட்ஷா மீது விழுந்தது. இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த முகமது உமைத், உமைத் பாட்ஷா ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். உடனே அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முகமது உமைத் பரிதாபமாக உயிர் இழந்தார். உமைத் பாட்ஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குமாரசாமி லே-அவுட் போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது அந்த மரம் பழமையானது என்பதால் முறிந்து ஸ்கூட்டர் மீது விழுந்தது தெரியவந்தது. இதற்கிடையில், மரம் முறிந்து மாணவர் உயிர் இழந்திருப்பது பற்றி அறிந்ததும் நேற்று காலையில் முகமது உமைத் வீட்டுக்கு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே சென்றார். பின்னர் அவர், மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் பலியான மாணவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் கங்காம்பிகே அறிவித்துள்ளார். இதுகுறித்து குமாரசாமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரம் முறிந்து விழுந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story