தூத்துக்குடியில் பா.ஜனதா கட்சியினர் வீடு, வீடாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.


தூத்துக்குடியில் பா.ஜனதா கட்சியினர் வீடு, வீடாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
x
தினத்தந்தி 4 March 2019 4:22 AM IST (Updated: 4 March 2019 4:22 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பா.ஜனதா கட்சியினர் வீடு, வீடாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி, 


தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அனைவரின் கவனத்தையும் இழுத்து உள்ளது. தூத்துக்குடியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மாநில தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. போட்டியிடுவதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல், கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் தங்கி இருந்து பல்வேறு கிராமங்களில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

அதேபோன்று அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதற்கு ஏற்ப தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்தில் வேகம் காட்டி வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள பா.ஜனதா உறுப்பினர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு உள்ளது. அதே போன்று மத்திய அரசின் திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகள் பட்டியல் வார்டு வாரியாக அந்தந்த பகுதி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியல்கள் அடிப்படையில் பா.ஜனதா நிர்வாகிகள் கட்சி உறுப்பினர் மற்றும் பயனாளிகள் வீடுகளுக்கு செல்கின்றனர். அங்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் பா.ஜனதா அரசின் சாதனைகள் குறித்து விளக்கி கூறுகின்றனர்.

தொடர்ந்து அந்த வீடுகளில் “எனது குடும்பம் பா.ஜ.க. குடும்பம்” என்னும் ஸ்டிக்கரை ஒட்டுகின்றனர். இது போன்று தங்கள் உறுப்பினர், பயனாளிகளின் குடும்பத்தினரை முழுமையாக பா.ஜனதா கவர்ந்து வருகிறது. இது தவிர வீடு, வீடாக சென்று மத்திய அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. போல்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று கீழரதவீதி தேரடி திடலில் முடிவடைந்தது. பேரணியில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரமேஷ் தலைமையில் துணைத்தலைவர் பால்ராஜ், செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் சிவராமன், பொருளாளர் சண்முகசுந்தரம், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று (திங்கட்கிழமை) மத்திய மந்திரியும், தமிழக பா.ஜனதா பொறுப்பாளருமான பியூஸ் கோயல், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தூத்துக்குடிக்கு வருகின்றனர். அவர்கள் பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதே போன்று தூத்துக்குடியில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களையும் சந்தித்து பேசுகின்றனர். இதனால் தூத்துக்குடி தொகுதியில் பா.ஜனதா தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கி இருப்பதாக தெரிகிறது. 

Next Story