கோவில்பட்டி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; விவசாயி பலி - மனைவி படுகாயம்


கோவில்பட்டி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; விவசாயி பலி - மனைவி படுகாயம்
x
தினத்தந்தி 3 March 2019 10:52 PM GMT (Updated: 2019-03-04T05:49:38+05:30)

கோவில்பட்டி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி பலியானார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது புளியங்குளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 71) விவசாயி. இவருடைய மகள் லலிதா. இவருடைய வீடு கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ளது. நேற்று காலையில் செல்வராஜ் தனது மனைவி சகுந்தலா ஆகியோர் கோவில்பட்டியில் உள்ள மகள் வீட்டுக்கு வந்து விட்டு, மாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

மோட்டார் சைக்கிள் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் சென்று கொண்டு இருந்தது. அப்போது, புளியங்குளம் விலக்கில் ஊருக்கு செல்வதற்காக திரும்பி உள்ளனர். அந்த சமயத்தில் சென்னையில் இருந்து நெற்கட்டும்செவல் நோக்கி சென்ற கார், எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே செல்வராஜ் உயிர் இழந்தார். கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சகுந்தலாவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் செல்லத்துரை (44) என்பவரை கைது செய்தனர். 

Next Story