செங்கோட்டையில் லாரி- மோட்டார்சைக்கிள் மோதல்; 2 பேர் பலி
செங்கோட்டையில் லாரி, மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டை,
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அழகப்பபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாரியப்பன் (வயது 30). இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த துரை மகன் சவுந்திரபாண்டியன் (23). இவர் செங்கோட்டையில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். உறவினர்களான இவர்கள் இருவரும் நேற்று மதியம் மோட்டார்சைக்கிளில் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டருக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். சவுந்திரபாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
செங்கோட்டை- இலத்தூர் ரோட்டில் ஆதிபராசக்தி கோவில் அருகே உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது எதிரே சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
மோதிய வேகத்தில் லாரி நிலைதடுமாறி அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சவுந்திரபாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாரியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் இறந்தார்.
இந்த விபத்தில், லாரி டிரைவர் செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரத்தை சேர்ந்த திருமலைக்குமார் (35) லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாரியப்பன், சவுந்திரபாண்டியன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் திருமலைக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story