திருக்கோவிலூரில் இருந்து கர்நாடகாவிற்கு மினி லாரியில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது; தப்பியோடியவருக்கு வலைவீச்சு


திருக்கோவிலூரில் இருந்து கர்நாடகாவிற்கு மினி லாரியில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது; தப்பியோடியவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 March 2019 3:15 AM IST (Updated: 4 March 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி, மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர், 

வேலூர் மாவட்ட உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி அவர்கள் சோதனையிட முயன்றனர். ஆனால் மினி லாரி நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் விரட்டி சென்று சிறிது தூரத்தில் மினி லாரியை மடக்கினர்.

அப்போது மினி லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் உள்பட 3 பேர் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்றதில் 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார்.

இதனை தொடர்ந்து மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர். அதில், நூதன முறையில் ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்தது. அதாவது மக்காச்சோளம் அடங்கிய மூட்டைகளுக்கு அடியில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. மினி லாரியில் 100 மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசி இருந்தது.

இது தொடர்பாக பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஜி.அரியூர் மேட்டுத்தெருவை சேர்ந்த கோபி (வயது 25), ஜி.அரியூர் கள்ளக்குறிச்சி மெயின்ரோட்டை சேர்ந்த உத்திராபதி (38) என்பதும், தப்பியோடியவர் அதே பகுதியை சேர்ந்த ஷாஜகான் என்பதும் தெரிய வந்தது. 3 பேரும் திருக்கோவிலூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதனை கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டை பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மினி லாரியில் கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபி, உத்திராபதி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஷாஜகானை வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் மினி லாரியுடன் 5 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். அவை வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story